டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்கட்ட வேட்பாளர்களாக 9 பேரை அறிவித்து உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 ந்தேதியும், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ந்தேதியும், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ந்தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இநத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி, அங்குள்ள பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதுதொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. அதன்படி காங்கிரஸ் 33 இடங்களிலும், தேசிய மாநாட்டு கட்சி 52 இடங்களிலும், ஐந்து தொகுதிகளில் “நட்பு கட்சிகளும் ” போட்டியிடுகிறது.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், பாந்தர்ஸ் கட்சி 1 இடத்திலும் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. மேலும் சில இடங்கள் உள்ளூர் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், 9 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே பாஜக தரப்பில், 44 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியான நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.