நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால், காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், “தமிழ்நாட்டில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதுகுறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு எம்.பி.யை தவிர தமிழ்நாட்டில் இருந்து சென்ற மற்ற எம்.பி.க்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் பேசினோம். இக்கட்டான இந்த சூழலை சமாளிக்க தமிழ் நாட்டுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என நான் கூட மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தேன். அதே போல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், டெல்லி சென்று குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.1000 கோடி நிதி கேட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சமே இல்லை என அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் பாராளுமன்றத்தில் கூறியதுதவறு. அவர் அளித்த தகவல்களும் தவறானவை. முதல் முறையாக பாராளுமன்றம் வந்துள்ளார். அடுத்தடுத்து பேசும்போது, இதுபோன்ற தவறுகளை அவர் திருத்திக் கொள்ள வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என கே.என் நேரு பேசியது அவருடைய சொந்த கருத்து. கருத்து சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்கள் பங்கீடு குறித்து கட்சிகளின் தலைமைகள் தான் பேசி முடிவு செய்யும். உள்ளாட்சி, சட்டப்பேரவை தேர்தல்களிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும்.
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், இடைத்தேர்தலிலும் அங்கு காங்கிரஸ் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை திமுக தரப்பில், உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும்” என்று தெரிவித்தார்.