டில்லி:
பத்மாவத் திரைபடம் தடுத்து நிறுத்தப்பட்டதை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஏன் மவுனமாக உள்ளார்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘கலையை அழிக்கும் விதமாக பத்மாவத் படம் திரையிடுவதை தடுத்து நிறுத்துவது வெறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது மற்றும் முற்றிலும் வெறுப்பூட்டும் செயலாகும். படம் வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய போதும், ஏன் இந்த வன்முறை சம்பவங்கள் பாஜக ஆளும் ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டும் நடக்கிறது.
இதற்கு பின்னால் ஏதோ மர்மம் இருக்கிறது?. திரைப்படத் தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியதற்கு ஆதரவாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஏன் செயல்படவில்லை. இதில் அமைச்சர் ஏன் மவுனம் காக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.