மும்பை
பெட்ரோல் விலை ஏற்றம் குறித்து பாலிவுட் பிரபலங்கள் ஏன் மவுனமாக உள்ளனர் என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறிக்கொண்டு ஒவ்வொரு நாளும் புது உச்சத்தை எட்டி வருகிறது. ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டி உள்ளது. எரி பொருட்கள் விலையேற்றத்தால் பல அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏற வாய்ப்பு உள்ளது. நடுத்தர மக்கள் இந்த விலையேற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
இது குறித்து பிரதமர் மோடி இந்தியாவில் எரிபொருள் தேவைகளில் பெரும்பகுதி இறக்குமதி மூலமே கிடைப்பதாகவும் அதைத் தடுக்க முந்தைய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் எரிபொருள் விலை ஏறி உள்ளதாகத் தெரிவித்தார். இதற்குக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “முன்பு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பெட்ரோல் டீசலுக்கு எதிராக பாலிவுட் பிரபலங்கள் குரல் எழுப்பினர். ஆனால் அதே பாலிவுட் பிரபலங்கள் தற்போதைய எரிபொருள் விலையேற்றம் குறித்து ஏன் மவுனம் காக்கின்றனர்?
இது குறித்து அவர்கள் பேச வேண்டும். அவ்வாறு இல்லை எனில் மகாராஷ்டிராவில் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் போன்றோரின் படங்களின் படப்படிப்பை நடத்தவும் திரைப்படங்களை வெளியிடவும் அனுமதிக்க மாட்டோம். நாட்டிலுள்ள மக்களிடம் பிரபலங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். ஒரு தலை பட்சமான நிலைப்பாட்டை அவர்கள் எடுக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.