டெல்லி: கலால் ஊழல் தொடர்பாக சிபிஐ, துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உள்பட பல இடங்களில் ரெய்டு நடத்திய நிலையில், அவர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி மாநில அரச கலால் வரி விதிப்புக்கான கொள்கை அம்மாநில அரசால் சமீபத்தில் திரும்பப்பெறப்பட்டது. இதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.  கல்வித்துறை மற்றும் கலால் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மணிஷ்  சிசோடியா மிகப் பெரிய பலன் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. டெல்லியில் உள்ள மது ஆலை முதலாளிகளுக்கு பலன் கிடைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சிபிஐ மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ளது. முதல்தகவல் அறிக்கையில்,  மணிஷ் சிசோடியா தொடர்புடைய நிறுவனத்திற்கு மது வர்த்தகர் ஒருவர் ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்ற அனுமதி பெற்று, சிபிஐ  நேற்று அதிரடியாக ரெய்டு நடத்தியது. மேலும் பல இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 14 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, மணிஷ் சிசோதியாவின் கணினி, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால், மத்தியஅரசு,  ஆம் ஆத்மியை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசின் தூண்டுதலால் சிபிஐ சோதனை நடத்துவதாகவும் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் விமர்சித்திருந்தார். கெஜ்ரிவாலின் வளர்ச்சியை தடுக்கவே இந்த சோதனை என மணிஷ் சிசோடியாவும் கூறியிருந்தார். மேலும், சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோதியா மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதற்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.