புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. இதில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயப்பட்டு வருகிறார்.
இருப்பினும் அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், மேற்குவங்கம், உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கவில்லை.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தனர். மேலும் மூத்த தலைவர்கள் 23 பேர் அதிருப்தி அணியாக மாறி ஜி23 குழுவாக செயல்பட்டனர். ஒவ்வொரு மாநில தேர்தலின்போதும் கூட காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என அவர்கள் கூறி வந்தனர். இதன் தொடர்ச்சியாக தான் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 17-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
தலைவர் பதவிக்காக நடந்த தேர்தலில் கட்சியின், 9,915 பிரதிநிதிகளில், 9,500க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். நாடு முழுதும், 68 இடங்களில் வாக்குபதிவு நடத்தப்பட்டது.
இந்த வாக்கு பெட்டிகள் புதுடில்லியில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு நேற்று வந்து சேர்ந்தன. அவை பாதுகாப்பாக ஒரு அறைக்குள் வைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 10 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. அனைத்து வாக்குகளும் கலக்கப்பட்டு, பிறகு எண்ணப்பட உள்ளன. இன்று மாலைக்குள் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது தெரியவரும்.
காங்கிரசின், 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு, ஆறாவது முறையாக தற்போது தேர்தல் நடந்துள்ளது. மேலும், 24 ஆண்டுக்குப் பின், காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.