ஸ்ரீநகர்: ராகுலின் ஒற்றுமை யாத்திரை பாதுகாப்பு காரணங்களால் நேற்று திடீரென ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது அவரது பயணம் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய யாத்திரையின்போது, ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா இந்த யாத்திரையில் கலந்து கொண்டு ராகுலுடன் கைகோர்த்து நடந்தார்.
தொடர்ந்து அவரது யாத்திரை பிர் பஞ்சால் மலையின் மையப்பகுதியில் உள்ள நவயுகா சுரங்கப்பாதை வழியாக தெற்கு காஷ்மீரில் உள்ள கிஷீகுந்த் நகரை நேற்று சென்றடைந்தது. ஆனால், அங்கு பாதுகாப்பு குறைபாடு காரணமாக, அவரது யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மாநில நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று காலைமீண்டும் தனது யாத்திரையை ராகுல் தொடங்கி உள்ளார்.
ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் நடைபெற்று வருகிறது இன்றைய யாத்திரையில், பிடிபி தலைவர் மெகபூபா முப்தி ராகுலுடன் இணைந்து சிறிது நேரம் நடந்து சென்றார். அவரது யாத்திரையின் இருபுறமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரும், துணை ராணுவப்படையினரும் கயிறு கட்டி பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்கின்றனர்.
போட்டோ வீடியோ: நன்றி ஏஎன்ஐ