டில்லி
நாடாளுமன்ற ஆயுட்காலம் 5 ஆண்டுகள் இருப்பதால் ஆறாவது முழு நிதிநிலை அறிக்கையை அரசு அளிக்க முடியாது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
பாஜக வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் அது வரையிலான கால கட்டத்துக்கு மட்டுமே பாஜக நிதிநிலை அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக இந்த ஆண்டின் முழுமையான நிதிநிலை அறிக்கையை பாராளுமன்றத்தில் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது மனிஷ் திவாரி, ”தற்போதைய பாஜக அரசின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே ஆகும். கடந்த 2014 ஆம் வருடம் அந்தக் கட்சி தனது முதல் நிதிநிலை அறிக்கையை அளித்தது. ஆகவே தற்போது இது ஆறாவது நிதிநிலை அறிக்கை ஆகும். இது இடைக்கால நிதிநிலை அறிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும்.
சட்டப்படி எந்த கட்சியின் ஆறாம் நிதிநிலை அறிக்கையை அளிக்க முடியாது. இந்த ஆட்சியின் ஆயுள் காலம் வரும் மே மாதம் 26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் 56 நாட்களே ஆட்சியில் உள்ள அரசால் எவ்வாறு 365 நாட்களுக்கான நிதிநிலை அறிக்கையை அளிக்க முடியும்?
தற்போது முழு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பாஜக அரசு அறிவித்தால் அது சட்டவிரோதமாகும். பாஜக அரசு முழு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தலில் வாக்காளர்களை கவர முயல்கிறது. அவ்வாறு நடக்க காங்கிரஸ் அனுமதிக்காது. இதை எதிர்த்து நாடாளுமன்றம் உள்ளேயும் வெளியேயும் கடும் போராட்டம் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.