புதுடெல்லி:
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது. ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டம் என்பதால் இரு அவைகளிலும் குடியரசுத்தலைவர் உரையாற்றினார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மாநாட்டுக் கட்சி, திமுக, மதிமுக, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்துள்ளன.
நாடாளுமன்ற காந்தி சிலையின் முன் போராடிய காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்போது, நாடாளுமன்ற வாயிலில் கைகளில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு இடதுசாரி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.