டெல்லி
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மாணவர்களுக்கு வட்டியிலா கடன் வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த காங்கிரசின் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளார்
விஜய் வசந்த் தனது கோரிக்கை மனுவில்,
“ஜி.எஸ்.டி வரி, வங்கி கடன்கள் மற்றும் விலைவாசி உயர்வினால் தவிக்கும் மக்களின் நலன் கருதி சில கோரிக்கைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். கல்வி செலவு பெருகி வரும் சூழ்நிலையில் பல ஏழை மாணவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வங்கிகளிலிருந்து கல்வி கடன் பெற்று தங்கள் கல்வியை தொடர்கின்றனர். ஆனால் வட்டியுடன் கூடிய இந்த கல்வி கடனை அடைப்பதற்கு மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர் சிரமப்படுகின்றனர்.
ஆகையால் அரசு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன் வழங்க முன்வர வேண்டும். அது போன்று கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி சேவை மீதான ஜி.எஸ்.டி வரியை குறைப்பதன் மூலம் அது மாணவர்களின் கல்வி செலவு குறைய ஏதுவாகும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் மீதான வரியை குறைப்பது அவர்களுக்கு அரசு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் மீதான வரியினை குறைத்து விலைவாசியை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர அரசு ஆவன செய்ய வேண்டும். சிறு குறு தொழில் முனைவோர்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் ஜி.எஸ்.டி சேவையை எளிமையாக்க வேண்டும்”
என்று கேட்டுக் கொண்டுள்ளார்.