டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவை நடவடிக்கையையும் முடக்கினர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,  பீகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வங்கதேசம், மற்றும்  ரோகிங்கியா உள்பட சில நாடுகளை சேர்ந்த அகதிகள் போலியாக வாக்குரிமை பெற்றுள்ளதை நீக்கும் வகையில்,  22 ஆண்டுகளுக்குப் பின் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில்  காங்கிரஸ் உள்பட  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 21ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடரில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆகிய விவகாரங்களை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால், முதல் வாரம் முழுவதும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நிகழாமல் முடங்கியது.

இந்த நிலையில் இன்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி, கனிமொழி, பிரியங்கா காந்தி, ஆ.ராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.