பெங்களூரு

பாஜக விரிக்கும் விலையில் கர்நாடக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிக்க மாட்டார்கள் என காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. மஜத தலைவர் குமாரசாமி முதல்வராகவும் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்த கூட்டணியைக் கலைத்து ஆட்சி அமைக்க பாஜக வெளிப்படையாகவே பல முயற்சிகள் செய்து வருகிறது. இது காங்கிரசாரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கர்நாடக பாஜக் தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி ஆட்சி கர்நாடகாவில் நிலைக்காது. இந்த கூட்டணியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு காங்கிரசை சேர்ந்த 20 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுக்கு வர உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டோம்” என தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா ஒரு பேட்டியில், “பாஜக தலைவர் எடியூரப்பா தேர்தல் முடிவுகல் வெளியாகும் மே 23 அன்று காங்கிரசின் 20 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுக்கு மாற உள்ளதாகவும் அதற்காக அவர்களுக்கு தர வேண்டியதை தந்து விட்டதாகவும் வெளிப்படையாக கூறி உள்ளார்.

இந்த பேச்சுக்கு பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் உடனடியாக பதில் அளிக்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பணம் அளிக்க பாஜகவுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்பதை இவர்கள் விளக்க வேண்டும்.  காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைவார்கள் என பாஜகவினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் தற்போது 20 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணையப் போவதாக எடியூரப்பா கூறி உள்ளார். இது பொய்த்தகவல் ஆகும். எந்த ஒரு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரும் பணம் மற்றும் பதவிக்காக கட்சி மாற மாட்டார்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜக விரிக்கும் வலையில் நிக்கயம் சிக்க மாட்டாரக்ள். கூட்டணி ஆட்சி தொடர்ந்து எவ்வித பாதிப்பும் இன்றி நடக்கும்” என தெரிவித்துள்ளார்.