டெல்லி:
சிஏஏ-க்கு எதிராக போராடியவர்கள்மீது காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை கழகத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா வத்ரா ஆகியோர் நேரில் சென்று புகார் அளித்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தியபோது, அத்துமீறி உள்ளே நுழைந்த காவல்துறையினர் அங்கு மாணவ மாணவிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் காவல்துறையினர் அத்துமீறி தாக்குதல்களை நடத்தினர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) அலுவலகத்திற்கு வந்து ‘குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது போராட்டக்காரர்கள் மீது மாநில காவல்துறை எடுத்த நடவடிக்கை எதிராக’ புகார் அளித்தனர். அவர்களுடன் வழக்கறிஞர்கள் வந்திருந்தனர்.