சென்னை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தென் இந்தியாவில் போட்டியிட தமிழ்நாடு மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுகவுடனும், கர்நாடகாவில் மஜத வுடனும் கூட்டணி அமைத்துள்ளது. தற்போதுள்ள நிலையில் இந்த கூட்ட்ணி தேர்தல் பிரசாரத்தில் முன்னிலையில் உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் ராகுல் காந்தியின் சமீபத்திய தென் இந்திய பயணம் காங்கிரசாருக்கு ஒரு புத்துணர்வை அளித்துள்ளது.

இந்நிலையில் நேற்று கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியை கர்நாடக மாநிலத்தில் இருந்து போட்டியிட அழைப்பு விடுத்துள்ளனர்.  அவர்கள் ராகுலின் பாட்டி இந்திரா காந்தி மற்றும் அவர் தாயார் சோனியா காந்தி ஆகியோர் கர்நாடகாவில் இருந்து வெற்றி பெற்றவர்கள் என்பதை சுட்டி காட்டுகின்றனர்.. அத்துடன் தங்கள் மாநிலத்தில் இருந்து பிரதமராக ராகுல் காந்தி வருவதை மாநில மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி தனது டிவிட்டரில் ராகுல் காந்தி தமிழகத்தில் இருந்து போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு காங்கிரஸ் செயலரும் முன்னாள் விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினருமான மானிகா தாகூரும் ஆதர்வு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாறுதல்கள் எப்போதும் நடக்கும். அந்த மாறுதலாக தற்போது ராகுல் காந்தி தமிழகத்தில் இருந்து பிரதமராக வரவேண்டும் எனவும் பல தலைவர்கள் கூறி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுவதை விரும்புவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ராகுல் காந்தி மீது பாஜக சுமத்தும் இந்திக்காரர், வட இந்தியர் என்னும் பெயரை நீக்க முடியும் என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவர் குடும்பத்தினர் ராகுல் காந்தி தமிழகத்தில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட அழுத்தம் அளித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் பிதார் தொகுதியை ராகுலுக்கு ஒதுக்க அம்மாநில தலைவர்கள் தயாராக உள்ளனர்.

நேற்று டில்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, “ராகுல் காந்தியை தங்கள் மாநிலங்களில் போட்டியிட வேண்டும என பல மாநிலங்களில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இது குறித்து கட்சி முடிவு செய்யும்” என கூறி உள்ளார்.

Thanx : Deccan Herald