லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ராகுல்காந்தி, அங்கு தனது தாயார் சோனியா, சகோதரி பிரியங்காவுடன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் ராகுலை எதிர்த்து, பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.
முன்னதாக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் உ.பி. மாநிலம் ஃபர்சாத்கஞ் விமான நிலையத்திற்கு தனது தாயார் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் வத்தா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோருடன் ராகுல் வருகை தந்தார். அவருக்கு விமான நிலையித்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி, கம்யூனிஸ்டு கட்சியினரும் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேசம்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, “ராகுல் காந்தியின் (‘பையா’) வேட்புமனு தாக்கலில் கலந்து கொள்ள ரேபரேலிக்கு செல்ல வேண்டியிருப்பதால் நான் அவசரமாக உள்ளேன். கிஷோரி லால் சர்மா அமேதியில் போட்டியிடப் போகிறார், அவரை உங்களுக்குத் தெரியும். 40 ஆண்டுகளாக அமேதியின் பிரச்சினைகளை அவர் நன்கு அறிந்தவர், நாங்கள் ஒன்றிணைந்து போராடுவோம், கிஷோரி லால் சர்மாவின் வெற்றியை உறுதி செய்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூத்த தலைவர்கள் அசோக் கெலாட் உள்பட பலர், ரேபரேலி தொகுதிக்கு வருகை தந்தனர். உ.பி. மாநிலத்தின் ரேபரேலி தொகுதிக் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நேரு-காந்தி குடும்பத்தின் செல்வாக்கு மிக்க தொகுதியாக இருந்து வருகிறது. இங்கு மகக்ளவை தேர்தலின் 5வது சுற்று வாக்குப்பதிவு மே 20ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கிய நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதையட்டி, அங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக, அமேதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.
ராகுல்காந்தி, ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதில் போட்டியிடும் நிலையில், 2வது தொகுதியாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து பாஜகவின் ரேபரேலி வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் கூறுகையில், “சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வதேரா ரேபரேலி மக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர். ரேபரேலி மக்கள் சோனியா காந்தியை எம்பியாக தேர்ந்தெடுத்தனர் ஆனால் அவர் பிரியங்கா காந்திக்கு அதிகாரத்தை வழங்கினார். கடந்த 10 ஆண்டுகளில் வத்ராவும் அவரும் அதை கிஷோரி லால் சர்மாவிடம் கொடுத்தனர், பிரியங்கா காந்தி அல்லது சோனியா காந்தி ரேபரேலி மக்களை சந்திக்கவில்லை என தெரிவித்தார்.
நாட்டின் சுதந்திரம் பெற்றதில் இருந்து அமேதி மற்றும் ரேபரேலியை காங்கிரஸ் மூன்று முறை மட்டுமே இழந்துள்ளது. 1977ல் ரேபரேலியில் முதன்முறையாக இந்திரா காந்தி, எமர்ஜென்சிக்குப் பிந்தைய தேர்தலில் ராஜ் நரேனிடம் தோல்வியடைந்தபோது முதன்முறையாக தோல்வியைச் சந்தித்தது. தொடர்ந்து, 1996 மற்றும் 1998 இல் மீண்டும் தொகுதியை இழந்தது, ஆனால் அதன் பின்னர் அங்கு தோற்கடிக்கப்படவில்லை. இதேபோல், 1977, 1998 மற்றும் 2019ல் அமேதியில் காங்கிரஸ் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் வயநாட்டில் வெற்றி பெற்ற நிலையில் அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியைத் தழுவினார். இந்தத் தேர்தலில் வயநாட்டில் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்வதாக ஏற்கனவே அறிவித்த ராகுல், தற்போது, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து கருத்துதெரிவித்த, கூட்டணி கட்சியைச் சேர்ந்த வயநாடு வேட்பாளர் ஆனிராஜா, ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து முன்பே அறிவித்திருக்க வேண்டும் என்றவர், “அவர் (ராகுல் காந்தி) அரசியல் அறநெறியைக் காட்டியிருக்க வேண்டும். ரேபரேலி போட்டி குறித்து வயநாடு மக்களுக்கு அவர் தெரிவித் திருக்க வேண்டும். இதை அவர் மறைத்து வைத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.” என்று விமர்சித்துள்ளார்.