டெல்லி: குஜராத் கிரிக்கெட் மைதானம் விவகாரத்தில் உண்மை எவ்வளவு அழகாக தன்னை வெளிக்கொண்டு வந்துள்ளது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்து உள்ளார்.
குஜராத் மாநிலம் மோட்டேராவில் 800 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு, அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியோடு இணைந்து திறந்து வைத்த மைதானமே உலகின் மிகப்பெரிய மைதானமாகும். மைதானத்தில், 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கலாம்.
முதலில் ‘சர்தார் வல்லபாய் படேல் மைதானம்’ எனப் பெயரிடப்பட்டிருந்த மைதானம், இன்று ‘நரேந்திர மோடி மைதானம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மைதானத்தின் பந்து வீச்சு முனைகளுக்கு, ரிலையன்ஸ் முனை எனவும், அதானி முனை எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் மோடி அரசு பெருமுதலாளிகளுக்காகச் செயல்பட்டு வருவதாக விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உண்மை தன்னை அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளது என்று கூறி உள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: உண்மை தன்னை எவ்வளவு அழகாக வெளிகொண்டு வந்துள்ளது. நரேந்திர மோடி மைதானம். ரிலையன்ஸ் முனை (RELIANCE END), அதானி எண்ட் (ADANI END), ஜெய்ஷா தலைமை வகிக்கிறார். #HumDoHumareDo (நாம் இருவர், நமக்கு இருவர்) என்று தெரிவித்துள்ளார்.