டெல்லி: அதானி குழுமத்துக்கு மின் உற்பத்தி துறையில் சலுகை வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ்பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். உயிரியல் அல்லாத பிரதமர் தனக்குப் பிடித்த டெம்பொ வாலாவின் நலன்களுக்காக மின்னல் வேகத்தில் நகர்கிறார் என தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்துக்கும், பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை. உண்மைக்கு புறம்பான தகவல்கள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று அதானி குழுமம் மறுப்பு வெளியிட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை கொண்டிருந்தனர். குறிப்பாக, மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதபியும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர். இதன் காரணமாக, அதானியின் சந்தேகத்துக்குரிய பங்குதார நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செபியின் தலைவராக மாதபி புரியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், அதானி நிறுவனதுக்காக பிரதமர் மோடி விரைந்து உதவி செய்வதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் குற்றம் சாட்டி உள்ளார். வங்க தேசத்துக்காக மின்சாரம் உற்பத்தி செய்து கொடுக்க அனுமதிக்கப்பட்ட அதானி நிறுவனம், தற்போது அங்கு ஏற்பட்டுள்ள கலவர சூழல் காரணமாக, அந்த மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி உதவி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதானி நிறுவனம், ஜார்க்கண்டில் மின்சாரம் உற்பத்தி செய்து பங்களாதேஷுக்கு வழங்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் மூலம் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரே நிறுவனம் அதானி நிறுவனம் என்று கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை இந்தியாவில் மின் உற்பத்தி செய்து மீண்டும் வெளிநாட்டுக்கு விற்பனை செய்வதற்கான அனுமதி அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது
அதானி குழுமத்துக்கு மின் உற்பத்தி துறையில் சலுகை வழங்கப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தனக்கு பிடித்தமானவர்களுக்கு சலுகை வழங்க வேண்டுமென்றால், நமது பயலாகிக்கல் பிரதமர் மின்னல் வேகத்தில் செயல்படுவார். ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை ஜார்கண்டில் மின் உற்பத்தி செய்யப்பட்டு மீண்டும் வங்கதேசத்துக்கு விற்பனை செய்கிறது அதானி குழுமம். மின் கொள்முதல் ஒப்பந்தம் மூலம் இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரே நிறுவனம் அதானி குழுமம்தான். தற்போது, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் மின் விற்பனை செய்ய இந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” இப்போது அந்த மின்சாரத்தை இந்தியாவிலேயே விற்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.