புதுடெல்லி: பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் கருத்து கேட்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுவரும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது.
ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதம், நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம், நிலமற்ற விவசாயிகளுக்கான வேளாண்மை சீர்திருத்தங்கள், விவசாயிகளின் கடன் பிரச்சினைகளை சரிசெய்தல், வங்கித்துறை சீர்திருத்தங்கள், மாநிலங்களுக்கான சட்டப்பூர்வ ஆபத்துகால நிதி உள்ளிட்டவை அந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களாக இடம்பெற உள்ளதாய் தகவல்கள் கூறுகின்றன.
இத்தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக பல தரப்பாரிடமும் கருத்து கேட்கும் செயல்முறை, கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவில் மொத்தம் 22 உறுப்பினர்கள் அடக்கம். இந்தக் குழு, பல்வேறு நிலைகளில், பல தரப்பாரிடம் மொத்தம் 174 கலந்துரையாடல்களை மேற்கொள்ளும். அவற்றில் 121 பொதுவெளி கலந்துரையாடல்களும், 53 நிபுணத்துவ கலந்துரையாடல்களும் அடக்கம்.
மொத்தம் 57 நகரங்கள் மற்றும் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
– மதுரை மாயாண்டி