நாட்டில் அதிக எம்.பி.க்களை வைத்துள்ளதால் உத்தரபிரதேச மாநிலம் எப்போதுமே அரசியலில் மையப்புள்ளியாக இருக்கிறது.
அந்த மாநிலத்தின் புதிய கூட்டாளிகளான சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியும்- தேர்தல் ஆட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்க்கவில்லை.
தேர்வு எழுதாமலேயே ‘பாஸ்’பண்ணிட்டு போ’ என்று கருணை காட்டும் விதமாக- சோனியா போட்டியிடும் ரேபரேலி ,ராகுல் போட்டியிடும் அமேதி ஆகிய இரு இடங்களில் அகிலேஷும், மாயாவதியும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
‘’’தான தர்மம் உங்களுக்கு மட்டும் சொந்தமா? எங்களுக்கும் பரிவு காட்டத்தெரியும்’’ என்ற ரீதியில் –மாயாவதி,அகிலேஷ் கடசியின் வி.ஐ.பி.க்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என காங்கிரசும் அறிவித்துள்ளது.
அந்த இடங்கள் எவை?
அகிலேஷ் யாதவ் அப்பா முலாயம் சிங் போட்டியிடும்-மெயின்புரி.
அகிலேஷ் மனைவி டிம்பிள் போட்டியிடும்-கன்னாஜ்.
முலாயம் சிங்கின் ரத்த சொந்தமான அக்ஷய் யாதவ் போட்டியிடும் பிரோசாபாத்.
அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கும் கூட –ராகுல் சலுகை அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் சரண்சிங் மகன் ஆஜீத்சிங்கின் ஆர்.எல்.டி கட்சி- அகிலேஷ் –மாயாவதியுடன் உடன்பாடு வைத்துள்ளது..
எனவே அஜீத்சிங் நிற்கும் முஸாபர்நகர். அவரது மகன் ஜெயந்த் களம் இறங்கும் பாக்பத் ஆகிய தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடாது.
மாயாவதி தேர்தலில் நிற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
தனது முடிவை மாயாவதி மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் – அவர் எந்த தொகுதியில் நின்றாலும் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளார்- மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர்.
இது ஒரு தொடக்கம் தான் என்கிறார்கள் –இரு தரப்பினரும். பா.ஜ..க.வை உ.பி.யில் தோற்கடிக்க வரும் நாட்களில் இது போன்ற புதிய யுக்திகள் கையாளப்படலாம் என தெரிகிறது.
–பாப்பாங்குளம் பாரதி