டில்லி:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து தீபக் மிஸ்ராவை நீக்கக்கோரி 7 கட்சிகள் சார்பில் கையெழுத்திட்ட மனு துணைஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கைநாயுடுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபக் மிஸ்ரா. இவர் கடந்த ஆண்டு (2017) ஆகஸ்டு மாதம் 28ந்தேதி சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
தீபக் மிஸ்ரா மீது ஏற்கனவே பல முறைகேடு புகார்களும், முன்னாள் அருணாச்சல பிரதேச முதல்வர் கலிக்கோ புல் தற்கொலை விவகாரத்தில் மிஸ்ரா பெயர் அடிபட்டது.
இதற்கிடையில், தலைமைநீதிபதி மீது, சக நீதிபதிகளே குற்றம் சாட்டி செய்தியாளர்களை சந்தித்தனர். மேலும், நீதித்துறையில் மத்திய அரசு தலையீடு இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.
இதன் காரணமாக உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியை பணியிடை நீக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டு வந்தது. இதற்காக காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளையும் வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தினை தொடங்கியது.
அதில் 50 மாநிலங்களவை உறுப்பினர் மட்டுமே கையெழுதிட்டிருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் போன்ற ஒருசில கட்சிகள் ஆதரவு அளிக்காமல் இருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி சந்தித்தபோது இதுகுறித்து விவாதித்ததாக கூறப்பட்டது. மேலும் இன்று காலையும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து தீபக் மிஸ்ராவை நீக்கக்கோரிய மனுவில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட 7 கட்சிகளை சேர்ந்த 67 எம்பிக்கள் கையெழுத்திட்டனர்.
அதையடுத்து, அந்த மனுவை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து 7 கட்சி தலைவர்கள் கொடுத்துள்ளனர்.