போபால்:
மத்திய பிரதேசத்தில் இருந்து டில்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் கமல்நாத்தை குறி வைத்து போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிண்ட்வாரா தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத் சிண்ட்வாரா வந்திருந்தார். பின்னர் டில்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை விமான நிலையம் வந்துள்ளார்.
தனியார் விமானத்தை பிடிப்பதற்காக அவசர அவசரமாக சென்று கொண்டிருந்த கமல்நாத்தை குறி வைத்து ரத்னேஷ் பவார் என்ற போலீஸ்காரர் தன்னுடைய துப்பாக்கியை நீட்டி மிரட்டியுள்ளார். போலீஸ்காரரின் இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. எனினும் அசம்பாவிதங்ள் நடைபெறும் முன்னர் மற்ற காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதை தொடர்ந்து அந்த போலீஸ்காரரை பணி நீக்கம் செய்யப்பட்டதாக சிண்ட்வாரா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீரஜ் சோனி தெரிவித்தார். மேலும் அவருக்கு மனநல மருத்துவ பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் மீது வழக்கு பதியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போலீஸ்காரர் ரத்னேஷ் பவார் 2 மாதங்களுக்கு முன்பு தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் ரத்னேஷூக்கு பணி வழங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அருண் யாதவ் கமல்நாத்திடம் கேட்டறிந்துள்ளார். காங்கிரஸ் மூத்தத் தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருக்கும் அளவிற்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பது கவலையளிக்கிறது. இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.