ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பவன் கெரா, கடந்த 10 ஆண்டுகளாக காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையால் அம்மாநில மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத ஆட்சி தான் கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மக்களின் காயங்களை போக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் இருக்கும். அதற்காக 22 மாவட்டங்களுக்கும் சென்று மக்களிடம் பேசி அதன் கீழ் எங்கள் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹ 3000, சுயஉதவி குழுக்களுக்கு ₹ 5 லட்சம் வரை வட்டியில்லா கடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹ 25 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு, 30 நிமிடங்களில் மலிவு சுகாதார சேவை, ஒவ்வொரு தாலுகாவிலும் ஆம்புலன்ஸ்களுடன் கூடிய மொபைல் கிளினிக்குகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது.
தவிர, காஷ்மீரி பண்டிட்டுகளின் மறுவாழ்வுக்கான டாக்டர் மன்மோகன் சிங்கின் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் அரசியலமைப்பின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முழு உரிமைகள் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின், “இந்த தேர்தல் அறிக்கை வெறும் காகித மூட்டை அல்ல. இது எங்கள் உத்தரவாதம். இதை நாங்கள் நிறைவேற்றுவோம்” என்று ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா கூறினார்.