டில்லி
சிறு சேமிப்பு வட்டி மாற்றப்பட்டு உடனடியாக திரும்பப் பெற்றது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்மலா சீதாராமனுக்கு கடும் கண்டனம் எழுப்பி உள்ளது.
மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டும் சேமிப்பு திட்டங்கள் மற்றும் டெபாசிட்டுக்களுக்கு வட்டி விகிதங்களை மாற்றி வருகிறது. நேற்று சிறு சேமிப்புக்களுக்கான வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் குறைத்து உத்தரவு வெளியிட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது.
இன்று காலை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த உத்தரவு தவறுதலாக பிறப்பிக்கப்பட்டதாகவும் அதைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தார். அத்துடன் கடந்த காலாண்டில் இருந்த அதே வட்டி விகிதம் மேலும் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு ஒரே இரவில் தனது உத்தரவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தானே திரும்பிப் பெற்றதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி டிவிட்டரில், “நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டியை குறைத்தது தவறுதலான உத்தரவா? அல்லது தேர்தலை மனதில் கொண்டு இந்த உத்தரவுகளின் விளைவுகளை உணர்ந்ததால் அவர் திரும்ப பெற்றாரா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவால தனது டிவிட்டரில் நிர்மலா சீதாராமனுக்கு, “நிதி அமைச்சர் அம்மையாரே, தாங்கள் அரசு நிர்வாகம் செய்கிறீர்களா அல்லது சர்க்கஸ் காட்சிகளை நடத்துகின்றீர்களா?
பல கோடி மக்களைப் பாதிக்கும் இத்தகையை உத்தரவுகளைத் தவறுதலாக வெளியிடுகின்றீர்கள் என்றால் நீங்கள் எவ்வாறு நாட்டின் பொருளாதார நிர்வாகத்தை நடத்துவீர்கள் எனக் கற்பனை செய்யவும் முடியவில்லை. இனியும் நீங்கள் நிதி அமைச்சராகத் தொடர உரிமை இல்லை” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.