டில்லி
நேபாளத்தில் அயோத்தி உள்ளதாகவும் ராமர் நேபாள நாட்டவர் எனவும் கூறிய அந்நாட்டுப் பிரதமருக்குக் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று நேபாள பிரதமர் சர்மா ஒளி, “இந்தியா நேபாளத்தின் மீது கலாச்சார ஆக்கிரமிப்பு செய்துள்ளது. நேபாளத்தில் உள்ள அயோத்தி இந்தியாவில் உள்ளதாக தவறாகக் கூறி வருகிறது. வால்மீகி ஆசிரமம் நேபாளத்தில் உள்ளது தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தியது இங்குதான். தசரதனின் மகன் ராமர் இந்தியர் இல்லை. அயோத்தியா நேபாளத்தில் தான் உள்ளது.
தகவல் தொடர்பு எதுவும் இல்லாத நிலையில் ராமர் எவ்வாறு ஜனகபுரி வந்து சீதாவைத் திருமணம் செய்திருக்க முடியும்? அயோத்தி இந்தியாவில் இருந்திருந்தால் ராமர் ஜனகபுரிக்கு வந்திருக்க முடியாது. அத்துடன் அயோத்தி அங்கிருந்து ஜனகபுரி இங்கு இருந்தால் தொலைபேசி, மொபைல் இல்லாத நேரத்தில் எப்படி திருமண பேச்சு வார்த்தை நிகழ்ந்திருக்கும்? எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தனது டிவிட்டரில், “நேபாள பிரதமருக்கு மனநிலை பிறழ்ந்துள்ளதாக தோன்றுகிறது. அல்லது சீனாவின் வரிகளுக்கு வாயசைக்கும் கிளியாகவோ சீனா ஆட்டுவிக்கும் பொம்மையாகவோ அவர் மாறி இருக்கலாம்.
முதலில் அவர் முன்பு இருந்த நேபாள எல்லைகளை மாற்றி இந்தியப் பகுதிகளை நேபாளத்துக்குள் கொண்டு வந்தார். இப்போது பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ராமர், சீதை, அயோத்தி, ராமராஜ்யம் ஆகியவற்றையும் மாற்றி நேபாளத்துக்குள் கொண்டு வந்து விட்டார்” எனப் பதிந்து கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.