பெங்களூரு:
கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக காங்கிரசுடனான கூட்டணி முறியும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ் நகர் உள்பட 16 மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, தமிழகம் உள்பட மொத்தம் 64 தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில், அதிகபட்சமாக கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்எல்ஏக்களின் தொகுதி களும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த இடைத்தேர்தல் வெற்றி, அங்கு தற்போது நடைபெற்று வரும் பாஜக ஆட்சிக்கு சத்தியசோதனை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு அரசியல் விறுவிறுப்பு, பரபரப்பு ஏற்பட்டுஉள்ளது.
இந்த நிலையில், மைசூரில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, இடைத்தேர்தல் நடைபெற உள்ள அனைத்து தொகுதி களிலும் வேட்பாளர்களை களமிறக்கும் பணியை தேவே கவுடா ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், குறைந்தது 10 இடங்களில் வெற்றிபெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இடைத்தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் தங்களது முந்தைய கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளது காங்கிரசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.