டெல்லி: பிரதமர் மோடியின் லாக் டவுன் குறித்த பேச்சில் ஏழைகளின் துயர் துடைக்க நிதியுதவியும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை பிரதமர் மோடி மே 3ம் தேதி வரை நீட்டித்து இன்று அறிவித்தார். இது தொடர்பாக நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றினார்.
உரையில் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தேவையான நிதித் தொகுப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான உறுதியான நடவடிக்கைகள் போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதுகுறித்து ஏதும் அறிவிக்கவில்லை.
இதையடுத்து, பிரதமர் மோடியின் உரை குறித்து காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறுகையில், முதலில் 21 நாட்களும், அடுத்து 19 நாட்களும் ஏழைகள் உணவு உள்பட தங்களைத் தாங்களை காப்பாற்றிக்கொள்ளுமாறு கைவிடப்பட்டுள்ளனர்.
மத்திய அரசிடம் பணம் இருக்கிறது, உணவு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு பணத்தையும் விடுவிக்காது, உணவையும் வழங்காது. என் அன்பான தேசத்துக்காக கண்ணீ்ர் வடிக்கிறேன். லாக் டவுனை வரவேற்கிறேன். அதை நீட்டித்த காரணத்தையும் புரிந்து கொண்டேன். ஆனால் முதலமைச்சர்கள் நிதி கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை.
மார்ச் 25ம் தேதிக்கு பின் எந்தவிதமான நிதித்தொகுப்பும் இல்லை. ரகுராம் ராஜன் முதல் ஜீன் ட்ரீஸ் வரை, பிரபாத் பட்நாயக் முதல் அபிஜித் பானர்ஜி வரை அளித்த அறிவுரைகள் கேட்காத காதில் சொல்லப்பட்டவையா என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், மக்களின் பொறுப்புகளை உணரவைப்பது மட்டும் தலைமை அல்ல. தேசத்தின் மக்களின் நம்பகத்தன்மையை நிறைவேற்றும் வகையிலும் அரசு செயல்பட வேண்டும் என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,. அறிவுரைகள், வார்த்தை ஜாலங்கள், உத்வேகம் இவை மட்டுமே இருந்தன. நிதித்தொகுப்பு இல்லை, எந்த விவரங்களும் இல்லை, உறுதியான செயல்பாடு இல்லை. மத்திய தர வகுப்பினருக்கும், சிறு, குறு தொழில் புரிபவர்களும் உறுதியான நடவடிக்கை கேட்டு கடவுளிடம் பிரார்த்திப்பதா என்று கேட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறுகையில்,லாக் டவுனை ஆதரிக்கிறேன். வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு நிதித்தொகுப்பும் நிவாரணமும் பிரதமர் மோடி அறிவித்திருக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஜன்தன் கணக்கு, ஜிஎஸ்டி நிலுவை, ஆகியவற்றை அறிவித்திருத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.