சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உள்ளது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது கரூரில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளைத் தடுத்து, அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  விஜயபாஸ்கர் மனுத் தாக்கல் செய்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2022-ம் ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை ? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்தும் போலீசார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அவர் மீது 23-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 23 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்  நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்