புதுச்சேரி,
புதுவையில் திட்டமிட்டபடி வருகிற மே 1-ந் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
அதுபோல மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, சமீபத்தில் கொண்டு வந்த மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
அதில், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டாய ஹெல்மட் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியிலும் மே1 ந்தேதி முதல் கட்டாய ஹெல்மட் திட்டம் அமல்படுத்தப்படு கிறது.
திட்டமிட்டபடி வருகிற மே1-ந் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதற்காக கடந்த 2 மாதமாக போலீசாரும், சமூக அமைப்பினரும் சேர்ந்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளோம் என்றும், இரு வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது என்று கூறியுள்ளார்.
சட்டத்தை மீறுபவர்கள் முதல் தடவை அவர்கள் பிடிபட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். அவர்கள் பெயர் விவரங்கள் உடனடியாக கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படும். அடுத்து 2-வது முறையாக அவர்கள் பிடிபட்டால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும். அதற்கு பிறகும் ஹெல்மெட் அணியாமல் வந்து சிக்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கோர்ட்டு, வழக்கு என பல பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியது வரும்.
இவ்வாறு போலீசார் கூறியுள்ளனர்.