சென்னை: யுபிஐ  பண பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று கூறி உள்ளது.

பெரிய UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணங்கள் விதிக்கப்படும் என்ற செய்திகளை நிதி அமைச்சகம்  நிராகரித்தது, அவை தவறானவை மற்றும்  ஆன்லைன் ஊடகங்கள்,  தவறாக வழிநடத்துகின்றன என்று கூறியது.  இதுபோன்ற ஆதாரமற்ற கூற்றுகள் குடிமக்களிடையே தேவையற்ற பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன என்று கூறியது.

இதுதொடர்பாக,   மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும்” என சமூக ஊடகங்களில் பரவிய தகவல் தவறானது என்றும், அனைத்து வங்கி கணக்குகள் மற்றும் வணிக கணக்குகளுக்கும் பரிவர்த்தனை கட்டணம் (MDR) எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சில ஊடகங்களில் வெளியான செய்திகளில், ₹2,000 அல்லது ரூ. 3,000க்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு charges வரலாம் என கூறப்பட்டிருந்தது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், மத்திய அரசு இந்த தகவல் உண்மையல்ல என்று அதிகாரப்பூர்வமாக மறுக்கிறது.

நிதி அமைச்சகம் கூறியது: “UPI பரிவர்த்தனை முறையில் எந்தவிதமான கட்டணமும் இன்றைய நிலவரப்படி விதிக்கப்படவில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அரசின் திட்டம் தொடர்ந்து செயல்படும்.”

NPCI (நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) தரவுகளின்படி, மாதத்திற்கு 100 கோடிக்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய கட்டணமில்லாத முறையே இந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறது.