டில்லி

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ரெயில்வே சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்களிடம் இருந்து அதற்கான இழப்பீடு வசூல் செய்யப்பட உள்ளது.

நாடெங்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்த போராட்டத்தின் போது ஏராளமான ரெயில்வே உள்ளிட்ட பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.   இந்த செயலுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அத்துடன் இந்த பொதுச் சொத்துக்களை நாசம் செய்தோரிடம் இருந்தே அதற்கான இழப்பீடு வசூல் செய்யப்படும் என யோகி அறிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷெகரில் பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்ததையொட்டி அந்நகர இஸ்லாமியர்கள் ரூ.6 லட்சத்தை யோகி அரசிடம் வழங்கி உள்ளனர்.  யோகியின் உத்தரவுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் கருத்துக்கள் பரவி வருகின்றன.  அதே வேளையில் அம்மாநிலத்தில் காவல்துறையினர் பல வீடுகளில் புகுந்து அங்குள்ளவர்களை அடித்து உதைக்கும் வீடியோக்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

யோகியின் இதே பாணியை இந்திய ரெயில்வேயும் பின்பற்றத் தொடங்கி உள்ளது.  இந்திய ரெயில்வே வாரிய தலைவர் வி கே யாதவ், “குடியுரிமை சட்ட எதிர்ப்பினால் நடந்த போராட்டங்களில் ரயில்வே சொத்துக்கள் ரூ.80 கோடி அளவுக்கு சேதமடைந்துள்ளன.  குறிப்பாக கிழக்கு ரயில்வேவுக்கு மட்டும் ரூ.70 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் வடகிழக்கு ரயில்வேவுக்கு ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவை ஆரம்பக்கட்ட மதிப்பீடு ஆகும். உண்மையான சேதத் தொகை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.   இந்தத் தொகையை வன்முறையில் ஈடுபட்டு ரயில்வேவுக்கு சேதம் விளைவித்தவர்களிடமிருந்தே திரும்பப் பெறத் திட்டம் வைத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.