சென்னை
சென்னை அண்ணாநகர் பெண் மருத்துவரிடம் இருந்து கழுத்து சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை சிறுவன ஒருவர் விரட்டி பிடித்துள்ளார்.
சென்னை அண்ணாநகர் திருமங்கலம் அருகே டி பிளாக் மூன்றாவது தெருவில் வசிக்கும் பெண் மருத்துவர் அமுதா. இவர் தனது வீட்டில் நடத்தி வரும் மருத்துவ மனையில் ஒரு இளைஞர் நோயாளி போல் நடித்து உள்ளே நுழந்து அமுதாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி உள்ளார்.
அமுதாவின் கூச்சலைக் கேட்டு எதிரில் ஒரு கடையில் பணி புரியும் சூர்யா என்னும் 17 வயதுச் சிறுவன் திருடனை விரட்டி உள்ளார். சூர்யா கூச்சலிட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை. தனி ஒருவராக சென்று அந்த திருடனை சூர்யா விரட்டி பிடித்த பிறகு அங்கிருந்த மக்கள் சிறுவனுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் ஒப்புவித்தனர். சங்கிலியை பறித்த திருடன் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பது தெரிய வந்துல்ளது.
இதை ஒட்டி சென்னை நகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நேற்று சூர்யாவை தனது அலுவலகத்துக்கு அழைத்து வந்து நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர், “சூர்யாவை போல பொதுமக்களும் தவறு நடக்கும் இடத்தில் அந்த நபர்களை தட்டிக் கேட்க வேண்டும். துணிச்சலுடன் திருடர்களை ஒவ்வொருவரும் பிடிக்க ஆரம்பித்தால் நாட்டில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் குறையும்” என தெரிவித்துள்ளார்.