கொலம்பியா

விவா கொலம்பியா ஏர்லைன்ஸ் தனது குறைந்த கட்டண விமானங்களில் இருக்கைகளை அகற்றிவிட்டு அனைவரையும் நின்றபடி பயணம் செய்விக்க திட்டமிட்டுளது.

விமானக் கட்டணங்களை குறைத்து மேலும் மேலும் பயணிகளை வான்வழி போக்குவரத்துக்கு மாற்ற பல விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.   ஆனால் விமானத்துக்கான நடைமுறை செலவுகளால் இந்த நிறுவனங்களால் லாபம் ஈட்ட முடிவதில்லை.

இந்நிலையில் கொலம்பியா நாட்டின் விவா கொலம்பியா ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானத்தில் உள்ள இருக்கைகளை அகற்றுவதின் மூலம், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனையில் உள்ளது.  இருக்கைகள் எவ்வளவோ அவ்வளவு பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.  ஆனால் அனைவரும் நின்றபடி பயணம் செய்ய வேண்டும் என்னும் போது அதிக பயணிகளை அதே விமானத்தில் பயணம் செய்விக்க முடியும்.

இது பற்றி அந்நிறுவனத்தின் வில்லியம் ஷா கூறுகையில்,  “அதிகபட்சமாக ஒரு மணி நேரப் பயணத்துக்கு இருக்கைகள் அவசியமில்லை.  அதே போல அந்த பயணத்தில் யாரும் இலவச உணவு, மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும் விரும்புவதில்லை.  இது விமானமில்லை,  இறக்கை கொண்ட பேருந்து.  அவ்வளவு தான்.  அதி வேக ரெயில்களில் கூட சீட் பெல்ட் இருப்பதில்லை.  அப்படி இருக்க விமானத்துக்கும் சீட் பெல்ட் தேவைப்படாது.” என தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் உண்டு.   விமானப் பயணிகளுக்கு ஒரு இருக்கை கூட தர இயலாத விமானத்தில் பயணம் செய்வது தவறு எனவும், மக்களை விலங்குகள் போல அதிக அளவில் அடைத்துக் கொண்டு பயணிக்க வைத்து விடுவார்கள் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

இது போல ஒரு எண்ணம் பல விமான நிறுவனங்களுக்கும் 2010 முதலே இருந்து வருகிறது.  இது நடைமுறைக்கு வருமா என்பது வரும் காலங்களில் தெரிந்து விடும்.