சென்னை: தமிழகத்தில் வரும் 8ந்தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் இயங்கும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த ஆண்டு (2020) டிசம்பர் முதல் இறுதியாண்டு மாணாக்கர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் வரும் 8 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, இளநிலை, முதுநிலை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. கல்லூரிகள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், கல்லூரிகளில் கிருமிநாசினி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் கல்லூரிகள் திறப்பதில் கூடுதல் தாமதம் ஏற்பட்டதால், பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் திறக்கப்படும் கல்லூரிகள் வாரத்தில் 6 நாள்களும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.