சென்னை: கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்கனவே வினியோகிக்கப்பட்டு இருக்கும் பழைய பேருந்து பயண அட்டையையே பயன்படுத்தலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து, இன்று முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
இந் நிலையில், நிகழ்வாண்டிற்கான பேருந்து பயண அட்டை வழங்காததால் பேருந்தில் பயணம் செய்வதில் மாணவர்களிடையே சிறிது குழப்பம் உருவானது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் புதிய பயண அட்டை வரும் வரை கடந்தாண்டு வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டையையே பயன்படுத்தி பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.