சென்னை: சென்னையில், கஞ்சா உள்பட போதை பொருள் விற்பனை செய்வது தொடர்பாக  ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்களிடையே வெட்டு குத்து மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி வளாகத்தில், மாணவர் வெட்டப்பட்ட விவகாரம்  சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் தொடர்பாக  3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை பல்லாவரம் பகுதியில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சென்னை உள்பட மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இதே கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வரும் திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (23) என்பவர், கடந்த 23 ஆம் தேதி, கல்லூரி அருகே உள்ள கடையில் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்தப் பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் ஒன்று, திடீரென கத்தியை எடுத்து ஹரிஷை வெட்டியுள்ளனர். அப்போது அவர் பயந்து ஓடி உள்ளார். ஆனாலும், மர்ம நபர்கள் அவரை விடாமல் துரத்திச் சென்று வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில் பலத்தை காயமடைந்த அவரை, அங்குள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லாவரம் போலீசார் மோதல் குறித்து கேட்டனர்.

பின்னர்,  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்,  மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.   கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதில் ஹரீஷுக்கும், அதே கல்லூரியில் படித்து வரும் அன்பரசு (20) என்பவரும் கல்லூரியில் மாணவர்களுக்கு கஞ்சா உள்பட போதை பொருள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

மேலும், கஞ்சா விற்பனை செய்வதில், இரு தரப்புக்கும்  இடையே தொழில் போட்டி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது வாக்குவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், சம்மவத்தன்று வெட்டு குத்து மோதலாக மாறி உள்ளது.  இதில் ஒருவருக்கு வெட்டு காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக,  விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த மாணவர் அன்பரசு (20), வேளச்சேரி பகுதியை சேர்ந்த பிரவீன் (18), நிஷாந்த் (20) ஆகிய மூன்று பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே போதைபொருள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கும் நிலையில், சென்னையில், பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை அனைத்து பகுதிகளில் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. மேலும் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாரா போன்ற போதை பொருட்கள் விற்பனையும் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை, கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. இதனால், போதை பொருள் நடமாட்டம் சென்னைவாசிகளிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சி இன்று கல்லூரிக்குள்ளே, மாணவர்களே  போதை பொருள் விற்பனை செய்து வருவதுடன், அவர்களும் ரவுடிகள் போல கத்தி, அரிவாளுடன் மோதலில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். இது எங்கே போய் முடியுமோ என  சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திமுக ஆட்சி அவல ஆட்சி – தமிழகம் போதை பொருள் மாநிலமாகி மாறியுள்ளது! எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்…

கொடுங்கையூரில் ‘மெத் லேப்’ என்ற பெயரில் போதை பொருள் தயாரித்து விற்பனை! திமுக கவுன்சிலர் மகன் உள்பட 7 கல்லூரி மாணவர்கள் கைது!

 

https://patrikai.com/drugs-trade-in-chennai-drugs-door-delivery-gang-of-4-arrested/