சென்னை: மின்சார ரெயிலில் தொங்கி கொண்டு சென்ற கல்லூரி மாணவர் பெரம்பூர் அருகே தண்டவாளம் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதி உயிரிழந்தார். அவரை காப்பற்ற முயன்ற மற்றொரு மாணவர் காயமடைந்தார். இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேருந்து மற்றும் ரயில்களில் தொங்கிக்கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது தொடர்ந்து வருகிறது. அதுபோல கல்லூரி மாணவர் களிடையே ஏற்படும் மோதல்களும் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை காவல்துறையினர் எச்சரித்தும், மாணவர்கள் அதை மதிக்க தவறி,  ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தமாணவர்கள் சுமார்  20 பேர் மொத்தமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில்  இருந்து திருவள்ளுர் செல்லும் ரயிலில் ஏறி சென்றனர். இவர்களில் பலர் ரயில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு தங்களது சாகங்களை வெளிப்படுத்தி வந்தனர். ரயில் பெரம்பூரை அடுத்த லோகா ரயில் நிலையம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மாவன்  ரயில் தண்டவாளம் அருகே உள்ள மின்கம்பதில் மோதி தூக்கி வீசப்பட்டனர். அவனது பெயர்  வெங்கடேசன் (வயது19 வயது) என்றும், பேரம்பாக்கம் அருகே உள்ள கடம்பத்தூரை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த மாணவனை காப்பாறற் சென்ற மற்றொரு மாணவரும் ரயிலில் இருந்து விழுந்துபலத்த காயம் அடைந்தார்.

இதனை பார்த்து பயணிகளும், கல்லூரி மாணவர்களும் கூச்சல் போட்டனர். பின்னர் இதுபற்றி உடனடியாக ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்கம்பத்தில் மோதிய மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார்,  இருவரையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் மாணவர் வெங்கடேசன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மாணவர் விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும், ரயில் பயணிகளிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.