வாஷிங்டன் :
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது குறித்து உலகம் முழுக்க பேசப்படுகிறது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கான தடுப்பூசி மருந்தை பைசர் நிறுவனம் முதல் கட்டமாக அனுப்பி வைத்துள்ளது.
முதல் கட்டமாக பெறப்பட்ட மருந்தை முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் பயன்படுத்த அமெரிக்க அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், பிரிட்டனில் முன்களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
சில இடங்களில் ஒவ்வாமை காரணமாக சிலர் மயங்கி விழுந்த நிலையில், ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு இதுபோல் ஒவ்வாமை ஏற்படுவது சகஜமான ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பயோஎன்டெக் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து பைசர் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசி எவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும், எவ்வாறு ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்து செல்லப்பட வேண்டும் என்பது குறித்து மருந்து பொருட்கள் விநியோகம் செய்வதை நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் (Medical Supply Chain Management) சில தகவல்களை கூறியுள்ளன, அதில் :
பயோஎன்டெக் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் பைசர் நிறுவனம், இந்த மருந்தை சுமார் 5,000 டோஸ்கள் அடங்கிய ஒரு வெப்ப கொள்கலனில் (தெர்மல் கண்டைனர்), அனுப்பி வைக்கிறது. இவ்வாறு தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் மருந்து கண்டைனர்கள் 10 நாட்கள் வரை திறக்கப்படாமல் இருக்க முடியும்.
தெர்மல் கண்டைனர் ஒவ்வொன்றிலும், ஒரு அடுக்கில், வரிசை ஒன்றுக்கு 13 என்ற கணக்கில் 15 வரிசைகளில், மொத்தம் 195 மருந்து குடுவைகள் (வயல்) கொண்ட ஐந்து அடுக்குகளை பெட்டியில் வைத்து, -60 டிகிரி செல்சியஸை பராமரிக்க அதன் மீது உலர் பனி (ட்ரை ஐஸ்) பாக்கெட்டுகள் கொண்டு நிரப்புகிறது, இப்படி நிரப்பப்பட்ட தெர்மல் கண்டைனர் ஒவ்வொன்றும் 36.5 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
இவ்வாறு பெறப்படும் தெர்மல் கண்டைனர்களை – 80 முதல் -60 டிகிரி செல்ஸியஸ் வரையிலான உறைபனி நிலையில் பாதுகாக்க கூடிய சிறப்பு பாதுகாப்பு வசதிகளில் 6 மாதங்கள் வரை வைக்க முடியும்.
தடுப்பூசி போட மருந்துகளை எடுக்கும் போது தெர்மல் கண்டைனரை தரையில் (சமதளத்தில்) வைத்து எடுக்க வேண்டும், ஒரு அடுக்கை வெளியில் எடுத்த 3 நிமிடத்தில் அதை மீண்டும் உள்ளே வைத்து விட வேண்டும், இப்படி வெளியே எடுத்து மீண்டும் உள்ளே வைத்த இந்த அடுக்கை 2 மணி நேரம் கழித்து தான் மீண்டும் வெளியில் எடுக்க வேண்டும். அதே நேரம் இந்த தெர்மாகோல் பெட்டியை ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் திறக்க கூடாது.
இந்த அடுக்கை வெளியில் எடுக்கும் போது, அரை வெப்பநிலை (ரூம் டெம்பரேச்சர்) 25 டிகிரி செல்சிஸ்க்கும் குறைவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், இந்த அடுக்கை மீண்டும் பெட்டிக்குள் வைக்க கூடாது.
வெளியே எடுத்த அடுக்கில் இருந்து எடுக்கப்படும் மருந்து குடுவைகளை, மீண்டும் அடுக்கில் வைக்க கூடாது, அதனை முழுவதும் பயன்படுத்திவிட வேண்டும், அல்லது தூக்கி எறிந்து விட வேண்டும். இந்த மருந்து குடுவைகள் ஒவ்வொன்றிலும் 5 டோஸ்கள் போடுமளவிற்கு மருந்து இருக்கும்.
தெர்மல் கண்டைனரில் உள்ள ட்ரை ஐஸை, 5 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது அவசியம் இருந்தால் அதற்கு முன்போ, தேவையான அளவு நிரப்பி மீண்டும் குளிர் பதன அறையில் வைக்க வேண்டும், இவ்வாறு 30 நாட்களுக்கு மட்டுமே இந்த பெட்டிகளை வைக்க முடியும்.
இந்த தெர்மல் கண்டைனர்களை – 80 டிகிரி செல்சியஸ் முதல் – 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள குளிர் பதன அறையில் சேமித்து வைக்க வேண்டும். பயன்பாட்டிற்காக வெளியில் எடுக்கும் தெர்மக்கோல் பெட்டிகளை 5 நிமிடத்திற்குள் மீண்டும் இந்த அறைக்குள் வைத்துவிட வேண்டும்.
அன்றைய பயன்பாட்டிற்கு தேவையான மருந்து குடுவைகளை மட்டும் எடுத்து குளிர் பதன பெட்டியில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கவும், அதிக பட்சம் 120 மணி நேரம் (5 நாட்கள்) மட்டுமே வைக்க முடியும்.
பயன்பாட்டிற்கு வெளியில் எடுக்கப்பட்ட குடுவைகள் ஒவ்வொன்றிலும் அந்த தேதியை குறிப்பிட வேண்டியது அவசியம்.
குளிர் பதன பெட்டியில் இருந்து வெளியில் எடுத்த மருந்து குடுவையை மூன்று மணி நேரத்திற்குள்ளும், தடுப்பூசி மருந்துடன் நீர்ம திரவம் சேர்க்கப்பட்ட மருந்து கலவை அடங்கிய குடுவையை ஆறு மணி நேரத்திற்குள்ளும் பயன்படுத்த வேண்டும், நேரம் கடந்து மீதம் இருக்கும் மருந்தை தூக்கி எறிந்துவிடவேண்டும்.
இதுவரை 29 லட்சம் டோஸ்கள் அதாவது சுமார் 6 லட்சம் மருந்து குடுவைகளை அமெரிக்காவிற்கு அனுப்பிவைத்திருக்கும் பைசர் நிறுவனம், 2021 இறுதிக்குள் 5 கோடி டோஸ்கள் அடங்கிய 1 கோடி மருந்து குடுவைகளை தயாரிக்கும் நிலையில் உள்ளது. இது 2.5 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ்கள் போட தேவையான அளவு இருக்கும்.
முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர், 21 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் மருந்து கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பல கட்ட கால கெடு மற்றும் பயன்பாட்டு முறையுடன் வெளிவந்திருக்கும் இந்த தடுப்பு மருந்தை இந்தியாவில், 2021 பிப்ரவரி மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
2021 இறுதிக்குள் 1 கோடி மருந்து குடுவைகளை மட்டுமே தயாரிக்க கூடிய நிலையில் உள்ள பைசர் நிறுவனம், இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்பதும் மருந்தை பாதுகாக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் உள்ளதா என்பதும் இனி தான் தெரியவரும்.