தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர்…

தேன் ஈயினால் பூஜிக்கப்பட்டதால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது.

கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில். வெள்ளலூரில் அமைந்த புராதனமான ஸ்தலம். இவ்வூர் வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். ரோமான்யர் காலத்து காசுகள், மோதிரங்கள் இரண்டு மணிகள், தங்க தாம்பாளம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரோமான்யர்கள் இங்கு வந்து வாணிபம் செய்தது புலனாகிறது. காஞ்சி மாநதி எனும் நொய்யல் நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.

இவ்வூர் அன்னதான புரி, சிவபுரி, வேளிர் ஊர், சர்க்கார் அக்ரஹாரம், சதுர்வேத மங்கலம் வெள்ளலூர் என பலபெயர்களால் வழங்கப்பட்டதாக வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள வெள்ளலூர் எனும் பெயரே நிலைத்து விட்டது. கரிகாற் சோழன் ஆட்சி செய்த காலத்தில் அரசிளங்குமரன் தெருவில் தேரை ஓட்டிச் சென்ற போது ஒரு பசுகன்றின் மீது தேர் சக்கரம் ஏறி அக்கன்று, அவ்விடத்திலேயே மாண்டது. அதற்குத் தண்டனையாக தன் மகனைத் தேர் ஓட்டிக் கொன்றான். இக் கொலையால் அரசனுக்கு விருமத்தி தோஷம் பிடித்தது. அதைப் போக்குவதற்கு காமாக்ஷி என்ற குறித்தியிடம் குறி கேட்க, கொங்கு நாட்டில் மக்களைக் குடியேற்றி, கோயில்களைக் கட்டி திருப்பணி செய்தால் விருமத்தி தோஷம் தொலையும் எனக் கூறினாள். அதன்படி கரிகாற் சோழன் தன் பரிவாரங்களான சேரன் சமய முதலி, கத்துரி ரங்கப்பசெட்டி ஆகியோருடன் கொங்கு நாட்டிற்குப் புறப்பட்டான். கரூரில் தொடங்கி ஒவ்வொரு சிவன்கோயில்களையும் ஊர்களையும் தோற்றுவித்து வெள்ளலூருக்கு வந்து சேர்ந்தனர். தன் பரிவாரங்களுடன் வெள்ளை என்கிற இருளன் பதிவனத்திற்குச் சென்றனர். அங்கு கோயில் கட்டுவதற்காக வனத்தை அழித்து சுத்தம் செய்யும் போது சுயம்புவாக ஒரு சிவலிங்கத் திருமேனியைக் கண்டனர். சோழன் கொங்கு நாட்டிற்கு வந்து போது அப்பகுதி அடர்ந்த வனமாக இருந்தது. ஆங்காங்கு இருளர்கள் பதிகளை கட்டிக்கொண்டு வேட்டையாடி பிழைத்து குல தெய்வத்திற்கு கோயில் கட்டி வழிபட்டுவந்தனர்.

அவ்வனத்தில் குடி இருந்த இருளன் வெள்ளையன் பெயரில் வெள்ளலூர் எனும் ஊரையும் உருவாக்கி பல்வேறு குலத்தவர்களையும் குடி அமர்த்தினார். கோயிலையும் கட்டி முடித்தனர். கோயிலுக்கு அருகே குளம், கோட்டை மற்றும் பேட்டை ஆகியவற்றை உருவாக்கினார். ஊரை நிர்வாகம் செய்ய அதிகாரிகளையும் நியமித்தார். உத்தம பண்டிதரை வரவழைத்து தேனீஸ்வர முடையாருக்கு அஷ்ட மந்திர பிரதிஷ்டையும் செய்யப்பட்டது.

கோயில் பூஜைகள் திருவிழாக்கள் தங்கு தடையின்றி நடந்து வர கோயிலுக்கு மானியமாக வயல்களையும் பூமிகளையும் தானமாக அளித்து ஓலைப்பட்டயம் வழங்கினார். கோயில் பூஜைகளும் திருவிழாக்களும் தங்கு தடையின்றி நடந்து வரலாயிற்று. கொங்கு நாட்டில் கரிகாற்சோழன் கரூர் முதல் முட்டம் வரை புகழ்பெற்ற 36 சிவன் கோயில்களை உருவாக்கினான். அவற்றுள் இதுவும் ஒன்று. தேனீஸ்வரர் கோயில்.

ஸ்தல விருட்சம் வன்னி மரம். இங்கு ஆண் பெண் என இருமரங்கள் இருப்பது விசேஷம். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றுமே சிறந்து விளங்குவதால் இத்தலம் ஆற்றல் மிகுந்த சாநித்யம் வாய்ந்த தலமாக விளங்குகிறது. மேலும் புராதனமான இத்தலத்தில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை உணரமுடியும். சனி ராகு கேது தோஷ பரிகாரத்திற்கு திருநள்ளாறு தலத்திற்கு இணையான தலமாக விளங்குவதாகத் தெரிவிக்கின்றனர்.

சூரியன் வழிபாடு செய்வதால் திருமண தோஷம் நிவர்த்தியாகி இறையருளால் நடைபெறுகிறது. விநாயகருடன் வன்னிமரம் இருப்பதால் நவக்கிரக தோஷம் நிவர்த்தி ஆகிறது.

கோயில் உள்ளே நுழைந்தவுடன் சுற்று சுவற்றை ஒட்டி இடதுபுறம் மேற்கு நோக்கிய நிலையில் மிகச் சிறிய சன்னிதியில் ஜோதிலிங்கேசர் வீற்றுள்ளார். இவரை வணங்கிய பின் தான் உள்ளே செல்ல முடியும். ராமலிங்க அடிகளார் வழிபட்ட லிங்கமாகும்.

கோவை உக்கடத்திலிருந்து பஸ் மூலம் வெள்ளலூர் நிறுத்தத்தில் இறங்கி கோயிலை அடையலாம்.

[youtube-feed feed=1]