கோவை சாய்பாபா கோவில் தென்னிந்தியாவின் சீரடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் இருப்பதாலேயே அப்பகுதி சாய்பாபா காலனி என்ற காரணப்பெயரையும் பெற்றது.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் முதல் சாயிபாபா கோவிலான இக்கோவில் கடந்த 1939-ம் ஆண்டு நரசிம்மசுவாமிஜி மற்றும் வரதராஜா அய்யா ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த கோவில் தென்னிந்தியாவின் சீரடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் இருப்பதாலேயே அப்பகுதி சாய்பாபா காலனி என்ற காரணப்பெயரையும் பெற்றது.
ஆரம்ப காலகட்டத்தில் இக்கோவில் பாபாவின் திருவுருவப் படத்தை வைத்து பூஜித்து வந்தனர். கடந்த 1946ம் ஆண்டு இந்த கோவில் ஆகம விதிகளின் படி கட்டப்பட்டு முதல் முறையாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 1961 ஆண்டு சத்ய சாய்பாபாவால் மூலவர் பாபாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. உலகிலேயே சாய்பாபாவிற்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது சிலை இங்குள்ள மூலவர் சிலை என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.
மூலவர் சிலைக்கு பின்புறம் உள்ள மிகப்பெரிய சாய்பாபாவின் பழமையான ஓவியம் கைகளால் வரையப்பட்ட மிகப்பெரிய ஓவியமாக காட்சி தருகிறது. இதை இன்றளவும் கோவில் நிர்வாகத்தினர் பாதுகாத்து வருகின்றனர்.
மதவேறுபாடுகளின்றி அனைத்து மதத்தவர்களும் வழிபடும் இத்தலத்தில் இந்துக்கள் திருவிளக்கு ஏற்றியும், கிறித்துவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும் இந்த கோவிலில் வழிபாடு நடத்துகின்றனர்.
தினமும் காலை 5.15 மதியம் 12.30 மாலை 6.15 இரவு 8.30 மணி என நான்கு கால பூஜைகளும் இருவேளைகளிலும் அபிஷேகமும், வியாழக்கிழமை தோறும் மூன்று வேளை அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது.
ஆசியாவிலேயே சாய்பாபாவிற்காக தங்கத்தேர் இந்த கோவிலில் உள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் தங்கத்தேரில் பவனி வந்து சாய்பாபா பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இக்கோவிலில் பாபா தரிசன தினம், குரு பூர்ணிமா, ராமநவமி, விஜயதசமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் ஹோமம், சிறப்பு பூஜைகள் நடத்துப்பட்டு வருகிறது.