கோவை: கோயமுத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் மனு அளித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பல வருடங்களாக பாலக்காடு கோட்டத்தில் இருந்து வந்த சேலம், கோவை உள்பட பல ரயில்வே கோட்டங்கள், தமிழக அரசு மற்றும் தமிழக எம்.பி.க்கள், பொதுமக்களின் தொடர் கோரிக்கை காரணமாக கடந்த 2016ம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டு சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது. இதன்கீழ் தென்மாவட்டங்கள் இணைக்கப்பட்டதுடன் கோவையும் இணைக்கப்பட்டது. ஆனால், பாலக்காடு பார்டரில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு உள்பட சில ரயில் நிலையங்கள் இன்னும் பாலக்கோடு கோட்டத்தில் தொடர்கிறது.
இந்த நிலையில், தெற்கு ரயில்வேயின்கீழ் கோவையை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டத்தை உருவாக்க வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோவையை முழுமையாக பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் கோவை பாஜக எம்எல்ஏ சீனிவாசன் மனு கொடுத்துள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
வானதி சீனிவாசன் மனு கொடுத்துள்ளது குறித்து, கோவை மாவட்ட எம்.பி. பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். ஏற்கனவே கோவை, சேலம் கோட்டத்தில் இருக்கும் போது, தனியாக கோவையை கோட்டம் தேவையா? இது வானதி சீனிவாசனுக்கு தெரியாதா அல்லது அக்கறையின்மையா, விளம்பர எண்ணமா? என கூறியிருப்பதுடன், மக்கள் பிரதிநிதி தகவல்களை தெரிந்துகொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
சில சமூக ஆர்வலர்களும் வானதியின் மனு குறித்து விமர்சித்து வருகின்றனர். சேலத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களும் என பல திசைகளுக்கு ரயில்கள் சென்று வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் பயன் பெறுகின்றனர். இதற்காகத்தான் பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் கேரளாவின் பாலக்காட்டில் இருந்து பிரிக்கப்பட்டு சேலம் கோட்டம் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது வானதி சீனிவாசன் கோவையை தலைமையிடமாக கொண்டு கோட்டம் அமைக்க வேண்டும் என்று கூறியிருப்பது வேண்டாத செயல். கோவைக்கு முழுமையாக ரயில்வே பாதைகளும் இல்லாத நிலையில், தற்போது வரை ஒரு வழிப்பாதையாகவே ரயில்கள் செல்று வருகின்றன. அப்படி இருக்கும்போது, கோவையை தலைமையிடமாக மாற்றினால் அது பொதுமக்களுக்கு சிக்கலையே ஏற்படுத்தும் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் எத்தனையோ பிரச்சினைகள் உள்ள. வானதி சீனிவாசனுக்கு அவரது எம்எல்ஏ தொகுதியில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அதுகுறித்து ஆய்வு செய்து, மக்கள் பிரச்சினைளை சரி செய்ய முன்வருவதை விட்டுவிட்டு, புதிதாக கோவை கோட்டம் என்று கூறி, திசைதிருப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர். ஏற்கனவே முடிந்துபோன ஒரு நிகழ்வை மீண்டும் கையில் எடுத்து பரபரப்பை ஏற்படுத்துவது வானதிக்கு அழகல்ல.
வானி சீனிவாசன் மத்திய அமைச்சரிடம் கொடுத்துள்ள மனு விவரம்:
தெற்கு ரயில்வேயின் கீழ் கோவையை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டத்தை உருவாக்க வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்திலிருந்து கோவையை முழுமையாக பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும். பொள்ளாச்சி-திருச்செந்தூர் விரைவு ரயிலை பாலக்காட்டுக்கு பதிலாக மேட்டுப் பாளையம் அல்லது கோவையில் இருந்து இயக்க வேண்டும். இதன்மூலம் கோவை பகுதியை தென் மாவட்டங்களுடன் இணைக்க முடியும். மாணவர்கள், வணிகர்கள், அலுவலகம் செல்பவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோவையில் இருந்து அருகில் உள்ள நகரங்களான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்துக்கு பாசஞ்சர் ரயில்களை இயக்க வேண்டும். கோவை மாநகரில் புதிய ரயில் பாதைகளை உருவாக்கி புதிய சர்க்யூட் ரயில்களை இயக்க வேண்டும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். இதுதொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும். பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தி கோவை வடக்கு ரயில் நிலையத்தை, நகரின் இரண்டாவது சந்திப்பாக மேம்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.