சென்னை: கொகைன் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக தமிழ்நாட்டின் முன்னாள் டி.ஜி.பி. ரவீந்திர நாத் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகளும், காவல்துறையினரும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. மகன் அருண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக நைஜிரியாவை சேர்ந்த ஜான் எஸி, மெக்கலன் அருண் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துணை ஆணையர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சென்னை நந்தம்பாக்கத்தில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அங்கு சென்ற தனிப்படையினர் பல இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், போதை பொருள் கடத்தி விற்பனை செய்வது வந்த, நைஜீரியாவின் ஜான் எஸி, மெக்கலன் மற்றும் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட அருண், முன்னாள் டி.ஜி.பி ரவீந்திரநாத் மகன் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து 2.5 கிராம் மெத்தம்பெட்டமைன், ரூ. 1 லட்சம் ரொக்கம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது போதைப்பொருள் கடத்தல் வழககில் முன்னாள் டி.ஜி.பி மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர் உள்ளதா? இவர்களுக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.