குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறாவிட்டால், பாஜகவுடனான தங்களது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க கூட தயங்கமாட்டோம் என அசாம் கன பரிஷத் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசின் தரப்பில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டதோடு, குடியரசுத் தலைவரின் ஒப்பதலோடு அமலும் செய்யப்பட்டது. இச்சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அச்சட்டத்திற்கு அசாம் கன பிரிஷத் முதலில் ஆதரவு தெரிவித்திருந்தது. இதனால் மாநிலத்தில் கடும் போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தன. இப்போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக தற்போது ஆதரவு நிலைபாட்டில் இருந்து அக்கட்சி பின்வாங்கியுள்ளது.

அசாம் மாநிலத்தில் அசாம் கன பரிஷத் கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள பாஜக, இந்த சட்டத்திருத்தத்தை திரும்ப பெறாவிட்டால் அசாமில் ஆட்சியை கவிழ்க்க கூட தாங்கள் தயங்கப்போவது இல்லை என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மகந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “குடியுரிமை சட்டத் திருத்தத்தை பாஜக அரசு வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெற தவறினால், அசாமில் நடைபெற்று வரும் பாஜக அரசுக்கு, நாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஆதரவு தெரிவித்த அசாம் கன பரிஷத், தற்போது திடீரென திர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.