சென்னை:
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனிச்சின்னம் கோருவதில் தவறில்லை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, மதிமுக, முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று மதிமுகவின் வைகோவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவனும் தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் மற்றும் விழுப்புரம். இவற்றில் சிதம்பரத்தில் போட்டியிட்ட தொல் திருமாவளவன் மட்டுமே தனிச்சின்னத்தில் போட்டியிட்டார். விழுப்புரத்தில் போட்டியிட்ட விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், திமுகவின் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார்.

அதேபோல ஈரோட்டில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர், பெரம்பலூரில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர், நாமக்கலில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஆகியோரும் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார்கள்.

அதாவது உதயசூரியன் சின்னம் அதிக தொகுதிகளில் போட்டியிட்டதே 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை வெல்ல உதவியது என்பது திமுகவினர் தெரிவிக்கின்றனர். இதே நிலையை வரும் சட்டமன்ற தேர்தலில் பின்பற்றவே திமுக விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனிச்சின்னம் கோருவதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.