பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி ? துணை பிரதமர், சபாநாயகர் மற்றும் முக்கிய இலாக்காக்கள் யாருக்கு ? என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் பாஜக தனது கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்றுள்ள இது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த 353 இடங்களை விட 60 இடங்கள் குறைவு.

இதில் பாஜக 240 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது பாஜக கடந்த முறை 303 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. கடந்த தேர்தலை விட 63 இடங்கள் குறைவாக பெற்றுள்ள நிலையில் மத்திய மந்திரிகள் 13 பேர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.

தனித்து ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்பதில் ஆர்வம் காட்டி வரும் மோடி அதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதீஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள இந்த ஆலோசனைக்குப் பிறகே பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையுமா என்பது குறித்து தெரியவரும்.

இந்த கூட்டத்தில், துணை பிரதமர், சபாநாயகர் மற்றும் முக்கிய இலாக்காக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

சந்திரபாபு நாயுடு தனது சபதத்தை நிறைவேற்றி நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்பதில் தீவிரம் காட்டி வருவதால் துணை பிரதமர் போன்ற பதவிகளில் அந்தக் கட்சி ஆர்வம் காட்டாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் இந்த ஆலோசனையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றால் பாஜக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.