சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது.
ஜார்க்ண்ட் மாநிலத்தில் அதிகாரத்தை தவறாக உபயோகப்படத்தி சுரங்க முறைகேடு செய்ததாக அம்மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் பல முறை விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், கடந்த இரு நாட்களுக்கு முன்பு அவரை அதிரடியாக கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பின்னர், வேறு வழியின்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் விசாரணைக்கு ஆஜரானர் ஹேமந்த் சோரன். இதனையடுத்து மீண்டும் விசாரணைக்கு அழைத்தது அமலாக்கத்துறை. ஆனால் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாமல் திடீரென தலைமறைவானார். அவருக்காக டெல்லி பங்களாவில் 30 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ரூ36 லட்சம் ரொக்கப் பணமும் கைப்பற்றது. அதைத்தொடர்ந்தே கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவரான சாம்பாய் சோரன் பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையில், ஹேமந்த் சோரன் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் நேற்று (பிப்ரவரி 1ந்தேதி) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஆஜராகினர். தங்கள் மனுவை உடனே விசாரிக்க வேண்டும் எனஅவர்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து இந்த மனுவை வெள்ளிக்கிழமை (இன்று) விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பான வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அப்போது, உயர்நீதிமன்ற விசாரணைக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், நீதிமன்றம் அனைவருக்கும் திறந்திருக்கிறது என தெரிவித்தனர்.