கொச்சி:

கொச்சி விமான நிலையத்தில் கால்வாயில் பாய்ந்து ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு, பைலட் மற்றும் உதவி பைலட் ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாததே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


கொச்சியிலிருந்து அபுதாபி செல்லும் ஏர் இந்தியா விமானம் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி 102 பயணிகளுடன் புறப்பட்டது.

சிறிது நேரத்தில் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள திறந்தவெளி மழைநீர் கால்வாயில் பாய்ந்தது. இந்த விபத்தில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்த இறுதி அறிக்கையை விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

விமானம் புறப்பட்ட போது மோசமான சீதோஷ்ண நிலை நிலவியது. விமானத்தின் வழிகாட்டி வாகனம் ஓடுபாதை சி யில் வர கேட்டுக் கொண்டது.

இரவில் மழை பெய்து கொண்டிருந்ததால், பாதை தெரியவில்லை. வேறு ஓடுதளத்தில் விமானம் செல்வதாக, உதவி பெண் பைலட் எச்சரித்தார்.
ஆனால் பைலட் அதை பொருட்படுத்தவில்லை. இதனால் பாதை மாறி விமானம் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

வழிகாட்டு வாகனத்தின் தொடர்புக்கு பதில் அளித்திருந்தாலோ அல்லது உதவி பைலட் ஆலோசனையை ஏற்றிருந்தாலோ, கொச்சி விமான நிலையத்தில் நடந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்.

விபத்துக்குள்ளான விமானத்தின் பைலட்டுக்கு 59 வயதாகிறது. 14,495 மணி நேரம் விமானங்களை இயக்கியிருக்கிறார். 28 வயதான உதவி பைலட் 1,429 மணி நேரம் விமானம் இயக்கிய அனுபம் உள்ளது.
இருவரும் கொச்சின்-அபுதாபி மார்க்கத்தில் முதல்முறையாக விமானத்தை இயக்கியுள்ளனர்.

பைலட்களுக்கு இடையே சரியான புரிதலை ஏற்படுத்துமாறு ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விமான ஓடுதளத்தில் ப்ளோரசண்ட் பயன்படுத்தி அடையாளக் குறி இட வேண்டும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.