சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கத்தில் ரூ.269 கோடியில் வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த மெட்ரோ நிலையம் அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. அதுபோல மந்தைவெளி பேருந்து பணிமனையில் ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டிற்காக ரூ.167.08 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கி உள்ளது.

சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ நிலையங்களில், வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளை வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது மேலும், மந்தைவெளி பேருந்து பணிமனையில் ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டிற்காக ரூ.167.08 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது
இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ நிலையங்களில், வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளை வடிவமைத்து கட்டுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நிலையான மற்றும் போக்குவரத்து சார்ந்த நகர வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பயணிகள் மெட்ரோ நிலையத்தை எளிதாக அணுகுவதை உறுதி செய்வதிலும் இத்திட்டம் ஒரு முக்கியமாக அமைகிறது.
இந்த பணியானது கட்டுமானப் பணிகள், கட்டிடக் கலை வேலைகள் மற்றும் கட்டுமான தொடர்புடைய அனைத்துப் பணிகளுடன், போக்குவரத்து சார்ந்த பிரத்யேக சொத்து மேம்பாட்டையும் உள்ளடக்கியது.
துரைப்பாக்கத்தில் 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 5 மேல் தளங்களைக் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது. சோழிங்கநல்லூரில் அடித்தளம் மற்றும் 8 மேல் தளங்களைக் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது. வழித்தடம்-3 மற்றும் வழித்தடம்-5 இடையிலான இணைப்பு பாதையுடன் சோழிங்கநல்லூர் வணிகக் கட்டிடத்தின் வழியாகச் செல்வது இத்திட்டத்தின் தனிச்சிறப்பாகும். இதன் மூலம் வணிக வளாகத்திலிருந்து மெட்ரோ நிலையத்திற்கு நேரடியாக செல்ல முடியும். இந்த கட்டுமானப் பணிகள் மெட்ரோ பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குவதோடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பயணக்கட்டணம் அல்லாத வருவாயை கணிசமாக உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம், பிரிட்ஜி அண்ட் ரூப் நிறுவனத்திற்கு ரூ.268.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் பிரிட்ஜி அண்ட் ரூப் நிறுவனத்தின் பொது மேலாளர் ரவி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த திட்டம் நிறைவு பெற்றவுடன், இரண்டு நிலையங்களிலும் தடையற்ற நுழைவு மற்றும் வெளியேறும் வசதிகள், மெட்ரோ பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த வணிகக் கட்டமைப்புகள் ஆகியவை வழங்கப்படும். வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பப் பாதையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து, போக்குவரத்து சார்ந்த மேம்பாடு மற்றும் நிலையான நகர வளர்ச்சி ஆகியவற்றிற்கான சென்னை மெட்ரோ நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த திட்டம் மேலும் வலுப்படுத்துகிறது.
இதைத்தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், மந்தைவெளி பேருந்து பணிமனையில் ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டிற்காக ரூ.167.08 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் (CMAML), தற்போதைய மந்தைவெளி மாநகரப் போக்குவரத்து கழகத்தின் (MTC) பணிமனை மற்றும் பேருந்து நிலையத்தில், சொத்து மேம்பாட்டுக் கட்டிடங்களை வடிவமைத்து கட்டுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது சென்னையின் நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது. இந்தத் திட்டம், தற்போது நடைபெற்று வரும் மந்தைவெளி சுரங்கப்பாதை மெட்ரோ நிலையம் மற்றும் மந்தைவெளி மாநகரப் போக்குவரத்து கழகத்தின் (MTC) பேருந்து நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளுடன் தடையின்றி இணைக்கப்பட்டு ஒரு முழுமையான ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: பரப்பளவு:
இக்கட்டுமானம் மொத்தம் 29,385 சதுர மீட்டர் அமைப்பு: இது கோபுரம் A மற்றும் கோபுரம் B என இரண்டு கட்டிடங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கட்டிடமும் 2 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்கள் என்ற அமைப்பில் கட்டப்படும்.
வசதிகள்: இங்கு பேருந்துகளில் பயணிகள் ஏறி இறக்குவதற்கான வசதிகள் (Bays), வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக இடங்கள் ஆகியவை இடம்பெறும். இது பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு, நகர்ப்புற பயன்பாட்டையும் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம், Bridge and Roof நிறுவனத்திற்கு ரூ.167.08 கோடி (GST உட்பட) மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் திரு. எம்.ஏ.சித்திக் இ.ஆ.ப., தலைமை நிர்வாக அதிகாரி திருமதி. ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் திரு. தி. அர்ச்சுனன் மற்றும் Bridge and Roof நிறுவனத்தின் பொது மேலாளர் (தெற்கு) திரு. டி. ரவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில் தலைமை பொது மேலாளர்கள் திரு. டி லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), டாக்டர் டி. ஜெபாசெல்வின் க்ளாட்சன் (ஒப்பந்தம் கொள்முதல் மற்றும் மேலாண்மை), பொது மேலாளர் திரு. ஆர். ரவிச்சந்திரன் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]