சென்னை

காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.1.11 கோடி ஊக்கத்தொகை வழங்கி உள்ளார்.

கடந்த மே மாதம் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பிரேசில் நாட்டில் 24-வது கோடைக்கால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா (18) இறகுப் பந்து போட்டியில் பங்கேற்று ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் குழுப் போட்டி ஆகியவற்றில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்..

ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்குபெற்ற சென்னையைச் சேர்ந்த பிரித்வி சேகர் (39) இரட்டையர் பிரிவில் 1 வெள்ளிப் பதக்கமும், ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் 2 வெண்கலப் பதக்கங்களும் என 3 பதக்கங்களை வென்றுள்ளார்.

தமிழக அரசு சார்பில் அனிகாவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி உள்ளார்.  அத்துடன் பிரித்வி சேகருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு சார்பில் 35 லட்சம் ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கி உள்ளார்.