சென்னை: நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில், கோவை, விருதுநகர் மாவட்டங்களில் களஆய்வு செய்த நிலையில், தொடர்ந்து நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
கடந்த 2023ம்ஆண்டு ஜனவரியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக 2023ம் ஆண்டு பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
அப்போது, “மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்” என தெரிவித்திருந்தார்.
அதன்படி, மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்தார். இதில், முதல்வர் ஸ்டாலின் உடன் முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதில், மாவட்டங்களின் நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், அரசுத் திட்டங்கள் மற்றும், இந்த ஆய்வின் போது, குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஏற்கனவே கோவை, விருதுநகர் மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர், அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பயனர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.