ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் தினம் தினம் புதிய தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக கேரள உயர்கல்வி துறை அமைச்சர் கே.டி.ஜலாலிடம், மத்திய அரசின் விசாரணை அமைப்புகள்( சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ) விசாரணை நடத்த முடிவு செய்துள்ளன.
ரம்ஜான் பண்டிகையின் போது அமீரகத்தில் இருந்து புனித புத்தகங்கள் என்ற பெயரில் வந்த பார்சல்களை அமைச்சர் ஜலால் பெற்றுள்ளார்.
அந்த புத்தகங்களை அவர் தனது தொகுதியில் விநியோகம் செய்துள்ளார். இதனை அமைச்சர் கே.டி.ஜலாலே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் மத்திய அரசின் அனுமதி பெறாமல்,இந்த பார்சல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்த பார்சல்களில் புத்தகங்கள் தவிர வேறு கடத்தல் பொருள்கள் இருந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ள மத்திய விசாரணை அமைப்புகள் , ஜலாலிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளன.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான குற்றவாளியான ஸ்வப்ணா, அமைச்சர் ஜலாலுடன் தொலைபேசி தொடர்பில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில்,அமைச்சரிடம் விசாரணை நடத்த இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பா.பாரதி